டிசம்பர் 18, கோயம்புத்தூர் (Coimbatore): உழைத்து வாழும் பலரும், இவ்வாறான கேடி கும்பலின் பேச்சில் மயங்கி, தங்கள் உழைத்த பணத்தை நம்பி முதலீடு செய்து ஏமாறும் சோகம் ஆண்டாண்டுகளாய் தொடருகிறது. முன்னதாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு ஏலசீட்டு பிடிப்பதாகவும், மாதம் சந்தா செலுத்தினால் தங்கம் வாங்கலாம் எனவும் தனி நபர் அமைப்புகள் முதல் தங்க நகைக்கடைகள் வரை மோசடி (Scam Alert) செய்த சம்பவங்கள் நடந்தன. ஆனால், இன்றளவில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, மக்களின் அறியாமை உட்பட பல்வேறு விஷயங்களை பயன்படுத்தி ஆயிரம் கோடிகளில் மோசடிகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. அதுபோன்ற மோசடி ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது.
பகிர்வதால் வந்த வினை: கோவை, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்களிடையே சமீபத்தில் ஈவிகோ (Evgo Money App) என்ற பணமுதலீடு செய்யும் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பயன்படுத்தி பணம் முதலீடு செய்த நபர்களுக்கு, அந்தந்த தொகைக்கு ஏற்ப இரட்டிப்பு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் முதலில் பணம் பெற்று குஷியானவர்கள் தங்களின் நண்பர்கள், உறவினர்கள் என அதனை பகிர தொடங்கியுள்ளனர். இதனால் அந்த செயலியில் பணம் தொடர்ந்து முதலீடு செய்யப்பட்டு வந்துள்ளது. South Tamilnadu Rains: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் பேய்மழை: முன்னதாகவே கணித்த வெதர்மேன்.. அடுத்த அப்டேட் என்ன?.!
போலியான ஆவணங்கள்: இவர்களை ஒருங்கிணைக்க வாட்சப் குழுவும் அமைக்கப்பட்டு விபரங்கள் பகிரப்பட்டு வந்துள்ளன. தங்களின் முதலீடு பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியபோது, நிறுவனம் சார்பில் தங்களின் போலியான ஆவணத்தையும் காண்பித்து இருக்கின்றனர். பெங்களூரில் ஆலோசனை கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து மக்களிடம் முதலீடு என்ற பெயரில் பணத்தை பெற்ற நிறுவனம், கடந்த வாரத்தில் தனது செயலியின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது.
கவர்ச்சி விளம்பரங்கள்: இதற்கு முன்னதாக தனது வாடிக்கையாளர்களிடம் அதிக தொகை கொடுத்தால், ஒரே வாரத்தில் அதனை இரட்டிப்பாக மீண்டும் பெறலாம் என்று கவர்ச்சியான விபரங்களை கொடுத்து முதலீடு செய்ய வைத்துள்ளது. பணத்தை பெற்றதும் நிறுவனம் தன்னை தலைமறைவாக்கியுள்ளது. இந்த நிறுவனத்தை வீசஸ் தேசாய், ராக் ஸ்டா என்பவர்கள் நிர்வகித்து வந்ததாகவும் தெரியவருகிறது. இவர்களின் தற்போதைய நிலை தெரியவில்லை.
வெளிநாட்டு நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அமெரிக்காவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் சார்ஜ் ஏற்றும் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி மோசடி நடந்தது அம்பலமானது. இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், தங்களின் பணத்தை மீட்டுத்தரக்கூறி கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட தேசாயின் வங்கிக்கணக்கை முடக்கம் செய்து, அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். Solar Explosive Blast: சோலார் வெடிமருந்து நிறுவனத்தில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பரிதாப பலி.!
பணத்தை இழந்தவர்கள் குமுறல்: இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "இங்கு தற்போது வந்து புகார் அளித்துள்ளது வெறும் 20 பேர் மட்டுமே. இவர்கள் இந்தியா முழுவதும் 7 இலட்சத்திற்கும் அதிகமான மக்களை கையாண்டு இருக்கின்றனர். உரிய விசாரணை நடத்தினால் ரூ.2 ஆயிரம் கோடி அளவிலான மோசடி தெரியவரும். நாங்கள் 20 பேரும் இழந்தது ரூ.36 இலட்சம் ஆகும். எங்களின் பணத்தை மீட்டுத்தரக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். நாங்கள் ஏமார்ந்துவிட்டோம், எங்களை போல யாரும் முதலீடு செய்து ஏமாற்றத்தை சந்திக்க வேண்டாம். நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஈவிகோ மோசடியில் பணம் இழந்திருக்கிறார்கள்" என கூறினார்கள்.
யூடியூபர்களின் வீடியோ: மேலும், ஈவிகோ நிறுவனத்தின் மோசடி தெரியாமல், அது தொடங்கப்பட்ட நாட்களில் யூடியூபர்கள் பணம் சம்பாதிக்க அருமை வழி என பாராட்டி வீடியோ பதிவிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.