ஜூலை 18, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநில அரசியலில் பெரும் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் உம்மன் சாண்டி. இவர் முன்னாள் கேரள முதல்வரும் , காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஆவார். இவருக்கு 79 வயதாகும் நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த உம்மன் சாண்டி இயற்கை எய்தியுள்ளார். அவரின் மறைவை சாண்டியின் மகன் சாண்டி உம்மன் தனது முகநூல் பக்கத்தில் இடுகையிட்டுள்ளதன் மூலம் உறுதி செய்யப்பட்டது.
கடந்த 2004 - 2006 ம் ஆண்டு வரையில் அம்மாநில முதல்வர் பொறுப்பில் இருந்த உம்மன் சாண்டி, ஐ.நா சபையின் சிறந்த முதல்வருக்கான உயரிய விருதையும் பெற்றார். 1979ல் இருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தொடரும் முத்த உறுப்பினராகவும் இவர் இருந்தார்.
5 தசாப்தங்களாக புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து அம்மாநில சட்டப்பேரவை தொகுதிக்கு தேர்வு செய்யப்பட்ட உம்மன் சாண்டி, 79 வயதில் காலமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேல் எம்.எல்.ஏ பதவி வகித்தவரின் மறைவு அம்மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.