ஏப்ரல் 27, புதுடெல்லி (NewDelhi): ஆப்ரிக்காவில் உள்ள சூடான் (Sudan) நாட்டில் இராணுவம் - துணை இராணுவம் இடையே நடைபெற்று வரும் மோதல் போக்கால், அங்கு மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் வெளிநாட்டு அரசுகள் தங்கள் நாட்டு மக்களை மீட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தலைமையிலான இந்திய அரசு (Govt Of India) தனது நாட்டு மக்களை மீட்க இராணுவம் மற்றும் கப்பற்படையை அனுப்பி வைத்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
ஆபரேஷன் காவேரி பெயரில் இந்தியர்கள் சூடானில் இருந்து இந்திய போர்க்கப்பல்கள் மற்றும் விமான படைகள் மூலமாக தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சூடானில் இருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் புதுடெல்லி விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.
அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளியே வருகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அவரின் தலைமையிலான மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் "பாரத் மாதா கி ஜெ, மோடி சிந்தாபாத், இந்தியன் ஆர்மி ஜிந்தாபாத்" என்ற முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர்.
முன்னதாக கடந்த ஆண்டு ரஷியா - உக்ரைன் படையெடுப்பு விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு தனது நாட்டவரை வெற்றிகரமாக மீட்டு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.