ஜூலை 19, மதுரை (Madurai News): விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செந்தில் முருகன். இவரின் மகன் பூபாலன். மதுரையில் உள்ள அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பூபாலன் காவலராக வேலை பார்த்து வருகிறார். தேனி மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி தங்க பிரியா. காவலர் பூபாலன் - தங்க பிரியா தம்பதிகளுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகளுக்கு தற்போது ஏழு வயதுடைய மகனும், ஐந்து வயதுடைய மகளும் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். Chennai News: காதல் தோல்வியால் விபரீதம்.. அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு தங்கை தற்கொலை.!
வரதட்சணை கொடுமை (Dowry Torture Case):
இந்நிலையில், தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவரும் தங்கப்பிரியா, தனது கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமரன், நாத்தனார் அனிதா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்துள்ளார். திருமணத்தின்போது 60 சவர நகைகள் உள்பட சீர்வரிசை பொருட்கள் தனது பெற்றோர் சார்பாக கொடுக்கப்பட்டதாகவும், இது போதாது அதிகம் வேண்டுமென கொடுமை செய்து வருவதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு கட்டி தர வேண்டும், கூடுதல் நகை வேண்டும் என தினமும் கொடுமைப்படுத்துவதாகவும் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமை செய்வது சித்திரவதை செய்வது என தாக்குதல்களும் தொடர்ந்துள்ளன. இதனால் படுகாயம் அடைந்த தங்கப்பிரியா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குடும்பத்துடன் தலைமறைவு:
இதையடுத்து, பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தற்போது காவல்துறையினர் பூபாலன், செந்தில்குமரன், விஜயா, அனிதா ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தலைமறைவாகிய நிலையில், குடும்பத்துடன் இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவலர் பூபாலன், காவல் ஆய்வாளர் செந்தில் குமரன் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் திருப்பூரில் தொழிலதிபரின் மகளான ரிதன்யா என்ற பெண்மணி வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது காவல் துறையில் பணியாற்றி வரும் நபரின் மனைவி தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக புகார் அளித்துள்ளது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.