ஏப்ரல் 22, சின்னமனூர் (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர், சீலையம்பட்டி சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் சின்னக்காளையின் சரவணன் (வயது 32). இதே பகுதியில் வசித்து வந்தவர் குருவையா மகள் முருகேஸ்வரி (வயது 28). தம்பதிவுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. மதுபோதைக்கு அடிமையான சரவணன் தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் திருமணமாகி ஓராண்டுக்கு பின்னர் விரக்த்தியடைந்த முருகேஸ்வரி பெற்றோரின் வீட்டுக்கு சென்று வசித்து வருகிறார். குடிபோதையில் சரவணன் தனது மனைவியை குடித்தனம் நடத்த அழைப்பதும், மாமனார் மகளை கணவருடன் அனுப்ப மறுப்பு தெரிவிப்பதும் என இருதரப்பு வாக்குவாதம் அவ்வப்போது தொடர்ந்து வந்துள்ளது. இதனிடையே, மனைவி தன்னுடன் குடித்தனம் நடத்த வரமறுப்பதற்கு மாமனார் வீட்டின் அருகே வசித்து வரும் அரியக்காள் (வயது 55) என்ற பெண் காரணம் என சரவணன் நினைத்துள்ளார். அமைதிசோலையில் ஒரு கொடூரம்.. அனாதை பெண்ணை எரித்துக்கொன்ற காதலன்.. அதிரவைத்த காரணம்.!
அறிவுரை கூறிய பெண்ணுக்கு சோகம்:
இதனால் வழக்கம்போல நேற்று மாலை குடித்துவிட்டு மாமனார் வீட்டுக்குச் சென்றவர் தகராறு செய்துள்ளார். அப்போது, அங்கு வந்த அரியக்காள், "எதற்கு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறாய்?. குடியை நிறுத்தினால் தானே மனைவி உன்னுடன் வந்து குடித்தனம் நடத்துவார். குடியை விட்டுவிட்டு குடித்தனம் நடத்த வழியைப்பாரு" என கூறியுள்ளார். இதனால் ஆவேசமான அரியக்காளை சரவணன் கத்தியால் குத்தியுள்ளார். பின் தப்பி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை பிடிக்கும் முயற்சியில் முருகேஸ்வரியின் தாய் சரணமணிக்கும் (வயது 54) கத்திக்குத்து விழுந்தது. படுகாயமடைந்த அரியக்காள் உடனடியாக சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், சரணமணி காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அரியக்காள் மகன் முனியப்பன் கொலை தொடர்பாக அளித்த புகாரின் பேரில் சின்னமனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.