ஜூலை 05, ஹத்ராஸ் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம், கோட்வாலி பகுதியில் நாராயண் சாகர் என்ற போலெ பாபா கலந்துகொண்ட ஆன்மீக சொற்பொழிவு மற்றும் இசைக்கச்சேரி விழாவில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பான விசாரணைக்கு பின்னர், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ராம் லடிட்டே (50), உபேந்திரா சிங் யாதவ் (62), மேக் சிங் (61), முகேஷ் குமார் (38), மஞ்சு யாதவ் (30), மஞ்சு தேவி (40) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ரூ.2 இலட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு:
உரிய அனுமதி இன்றி நிகழ்ச்சியை நடத்தியது, அதற்கான முன்னேற்பாடுகளை செய்யாதது உட்பட பல்வேறு காரணங்களால் கட்டுக்கடங்காமல் மக்கள் வெள்ளம் திரண்டு உயிர்பலி ஏற்பட்டது உறுதியானது. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் அதே வேளையில், 121 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், அங்குள்ள பல மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் இருந்தனர். மாநில அரசு சார்பில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.2 இலட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டு உள்ளது. Ladakh Earthquake: லடாக் பகுதியில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவு.!
ராகுல் காந்தி கருத்து:
இதனிடையே, இந்த விஷயத்தை கையில் எடுத்து ஹத்ராஸ் புறப்பட்ட இந்திய மக்களவையின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, உயிரிழந்தவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து நலம் விசாரித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த விஷயம் ஒரு சோகமான நிகழ்வு ஆகும். பலரும் உயிரிழந்துள்ளார்கள். நான் இதனை அரசியல் பார்வையில் இருந்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், நிர்வாகத்தின் குறைபாடுகள் நிறைந்து இருக்கிறது. உயிரிழந்தவர்கள் ஏழைகள் என்பதால், அவர்களுக்கான அதிகபட்ச இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இங்குள்ள மக்கள் பலரும் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்கிறார்கள். அவர்களின் நிலையை புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்" என கூறினார்.