அக்டோபர் 28, சென்னை (Chennai News): சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் திமுக நிர்வாகிகளுக்கான தேர்தல் பயிற்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக நிர்வாகிகளிடம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு விஷயங்களை பேசி இருந்தார். அவர் நிர்வாகிகளிடையே உரையாற்றுகையில், "எப்போதும் மக்களுடன் இணைந்து பணியாற்றும் திமுக நிர்வாகிகளுக்கு இந்த பயிற்சி கூட்டம் தேர்வுக்கு தயாராகும் மாணவர், அனைத்தையும் படித்த பின்னரும் மீண்டும் ஒருமுறை அதனை திருப்பி பார்ப்பது போன்றதாகும். தேர்தலுக்கு முன்பு நாமும் தற்போது அதே நடைமுறையை பின்பற்றப் போகிறோம். கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் முதல் நாம் எதிர் கொண்ட அனைத்து தேர்தல்களிலும் நமது வெற்றிகள் எதிரிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 தேர்தலிலும் நாம் அமோக வெற்றி பெறப் போகிறோம். TVK Vijay: வெற்று வசனம் பேசும் முதல்வர் ஸ்டாலின்.. திமுக அரசுக்கு எதிராக கொந்தளித்த தவெக தலைவர் விஜய்.. சரமாரி கேள்விகள்.!
திராவிட மாடல் 2.0 ஆட்சி:
அன்றைய நாளில் திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடங்கியது என செய்திகள் வெளியாக வேண்டும். இதை நான் உங்களுக்கு ஆணவமாக சொல்லவில்லை. உங்களின் உழைப்பு மீது நம்பிக்கை உள்ளது. நமது ஆட்சியின் சாதனைகள் மீதும், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கை மீதும் உறுதியாக நான் சொல்கிறேன். நமது திராவிட மாடல அரசு திட்டம், சாதனை என கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இடம்பெற்றுள்ளது. இலட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்றம், தொழில்துறையில் மிகப்பெரிய வளர்ச்சி, கல்வி துறையில் முன்னேற்றம் என நமது திராவிட மாடலின் சாதனை அடையாளமாக இருக்கிறது. இந்தியாவில் எந்த மாநில அரசும் செய்யாத சாதனையை நாம் செய்துள்ளோம். மீதமுள்ள எஞ்சிய வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம்.
அதிமுக கூட்டத்திடம் இருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டும் என பேச்சு:
நமது அரசு செய்த சாதனைகளை நாம் அனைவரும் வீடு, வீடாக சென்று ஆதரவு கேட்க வேண்டும். மத்திய, மாநில அரசியல்களிலேயே பல முரண்கள் இருக்கிறது. மத்திய பாஜக அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் வஞ்சகம் செய்கிறது. குறிப்பாக தமிழ்நாடுக்கு ஏராளமான துரோகங்களை செய்கிறது. தமிழ்நாடு அதனை எதிர்த்து போராடும். போராடி வெல்லும். இந்த வெற்றிக்கு உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். இதுவரை உறுதுணையாக இருந்தவர்களுக்கும், இனி இருக்கப் போகிறவர்களுக்கும் எனது சல்யூட். கடந்த 2021 தேர்தலில் தமிழ்நாட்டை அதிமுக கூட்டத்திடம் இருந்து மீட்டோம். 2026 தேர்தலில் பாஜக - அதிமுக கும்பலிடம் இருந்து பாதுகாப்பாக மீட்டு நாம் தமிழ்நாடு மக்களை காப்பாற்ற வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக நாம் செய்துள்ள வளர்ச்சிப் பணிகளை பாஜக, அதிமுக கூட்டணி கபளீகரம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. அவர்களை வேரோடு வீழ்த்தி ஆக வேண்டும்.
தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி திமுகவுக்கு தான் - ஸ்டாலின்:
எதிர்க்கட்சித் தலைவராக இருந்து வரும் பழனிசாமி பெயரளவுக்காவது திராவிட கட்சியாக இருந்த நிலையில், அந்த கட்சியை முழுவதுமாக அமித்ஷாவிடம் கொடுத்துள்ளார். அந்த கூட்டணியை தமிழ்நாடு மக்களும் விரும்பவில்லை. அவர்களின் கட்சிக்காரர்களும் விரும்பவில்லை. நமது கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சிகள் அவர்களுடன் வருவதாக தினமும் சொல்லி வருகிறார்கள். அதுவும் எடுபடவில்லை. மக்கள் அந்த கூட்டணியை நம்பவும் தயாராக இல்லை. தமிழ்நாட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்துக் கொண்டு மக்களிடம் வெல்வதாக ஊர் ஊராக சுற்றுகிறார்கள். அதில் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை. திராவிட முன்னேற்ற கழகம் 7-வது முறை ஆட்சியை அமைக்க வேண்டும். தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளும் தகுதி நமக்கு தான் உள்ளது என்பதையும் நிரூபிக்க வேண்டும். வெற்றி நமதாகும். விடாமுயற்சியுடன் பயணத்தை தொடங்குங்கள்" என பேசினார்.