செப்டம்பர் 11, விழுப்புரம் (Viluppuram News): புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி இடையே எழுந்த மோதல் பனிப்போராக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக நடந்து வந்தது. இந்த பிரச்சனைக்கு இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில், அன்புமணிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டு, அந்த குழு 16 குற்றசாட்டுகளை முன்வைத்து விளக்கம் அளிக்க வேண்டி அவகாசம் கொடுத்தது. இந்த விஷயத்தை கண்டுகொள்ளாத அன்புமணி கட்சிப்பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனிடையே, இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பு விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வைத்து நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி (PMK Ramadoss Latest Speech):
அப்போது பேசிய ராமதாஸ், "கட்சியின் விதிகளுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டுள்ளார். அவரின் மீது வைக்கப்பட்ட 16 குற்றசாட்டுகள் குறித்து நேரிலும், கடிதம் வாயிலாகவும் விளக்கம் அளிக்கவில்லை. இதனால் அவரின் மீதான குற்றசாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டு, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குகிறேன். கட்சியின் உறுப்பினர்கள் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. அவருடன் தொடர்பில் இருந்தால் அவர்களும் நீக்கப்படுவார்கள். அன்புமணிக்கு தலைமை பண்பு என்பது இல்லை. என்னை அவர் உளவு பார்த்திருக்கிறார். இதுவரை செயல் தலைவராக இருந்தவர், இனி எந்த பொறுப்பிலும் கிடையாது. அன்புமணியின் செயல்பாடுகள் கட்சிக்கு விரோதமாகவும், கட்சியின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருக்கிறது. நான் அரசியல் பயிற்றுவித்த பலரையும் பொறுப்பு தருவதாக கூறி அவர் அழைத்து சென்று இருக்கலாம். அவர்கள் மனம் திருந்தி வந்தால் வாய்ப்பு அளிக்கப்படும்" என தெரிவித்தார். இந்த அறிவிப்பு பாமகவில் மிகப்பெரிய சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது. Kallakurichi News: கள்ளகாதலனுடன் மொட்டை மாடியில் உல்லாசமாக இருந்த மனைவி.. தலை துண்டித்து கொடூரமாக இரட்டைப் படுகொலை.. கள்ளக்குறிச்சியில் பயங்கரம்.!
பாமக வழக்கறிஞர் கே. பாலு பேட்டி (PMK Lawyer K Balu Press meet):
இதனையடுத்து, சென்னையில் அன்புமணியின் ஆதரவாளரும், பாமக வழக்கறிஞருமான கே. பாலு இதுகுறித்து பேட்டி அளித்தார். அப்போது, "தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் அன்புமணி ராமதாஸ் தான். அவர் தலைமையிலான அணி மட்டுமே பாமக. எதிர்தரப்பில் பாமக தலைவர், பொருளாளர் என பொறுப்பு சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் அனைவரும் பாமகவில் கிடையாது. பொதுக்குழுவில் எடுத்த முடிவின் படி 2026 சட்டப்பேரவை தேர்தல் வரையில் அன்புமணி, வடிவேல் இராவணன், திலகபாமா உட்பட அனைவர்க்கும் பொறுப்பில் இருக்க அதிகாரம் உள்ளது. இதனை தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொண்டுள்ளது" என பேட்டி அளித்தார்.