மார்ச் 20, சட்டப்பேரவை (Chennai): தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர், இன்று 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. பட்ஜெட் உரை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் வாசிக்கப்படும்போதே, அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு இறுதியில் வெளிநடப்பு செய்தனர். நிதியமைச்சரின் உரையின் போதே, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றிக்கொண்டு இருந்தார். இதனை கண்டித்த சபாநாயகர் நிதியமைச்சர் உரை நிறைவடைந்த பின்னர் வாய்ப்பு தருவதாக பேசினாலும் பலன் இல்லை. இதனால் அவைகுறிப்பில் எதிர்க்கட்சி தலைவர் பேசியவை பதிவு செய்யப்படமாட்டாது என சபாநாயகர் அப்பாவுவால் தெரிவிக்கப்பட்டது.

வெளிநடப்பு செய்த அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அந்த பேட்டியில், "ஊடக நண்பர்கள், பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம். இன்று சட்டப்பேரவையில் ஈரோடு இடைத்தேர்தலில் போது வாக்காளர்களை ஆடு, மாடுகளை அடைப்பதை போல அடைத்து வைத்து சித்ரவதை செய்து, அச்சுறுத்தி வாக்களிக்க வைத்தது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என கண்டித்தோம். விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி, குடிநீர் வரி உயர்வு, அதிமுக தொண்டர்கள் மீது போலியான வழக்குப்பதிவு, +2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாமல் கல்வியில் பின்னடைவு, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்காமல் நீதிமன்றத்திற்கு சென்று அனுமதி வாங்கியது, விவசாயிகள் நெல்கொள்முதல் விலை உயரவில்லை, நெய்வேலி என்.எல்.சி விரிவாக்க நிலம் கையகப்படுத்தும் விவகாரம் உட்பட மக்களுக்கு எதிரான பல விஷயங்களை கண்டித்தும் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.

தமிழக பட்ஜெட்டை பொறுத்தமட்டில் 23 மாத திமுக அரசு ஆட்சியில் 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர் வரி, பால் விலை உட்பட அனைத்து வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவே மக்களுக்கான பரிசாக இருக்கிறது. இந்த ஆட்சியில் 1.5 இலட்சம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். இந்த ஆண்டில் 91 ஆயிரம் கோடி கடன் வாங்குவதாக கூறியுள்ளார்கள். இவர்கள் திட்டத்தை அறிவித்தாலும், அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இன்று ஜி.எஸ்.டி வரி உயர்ந்துள்ளது, கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு வருவாய், பெட்ரோல் டீசல் வரி உயர்ந்துள்ளது. ஆனால், பற்றாக்குறை பூஜ்யமாக இருப்பதை விட்டுவிட்டு, ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம் என பொய் கூறுகிறார்கள். TN Budget 2023-24: தமிழ்நாடு 2023-24 பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?.. முழு அறிவிப்பும் உள்ளே..! 

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பல திட்டங்கள் அறிவித்து நிதியை ஒதுக்கி செய்து அதனை செயல்படுத்தினோம். அதனால் பற்றாக்குறை ஏற்பட்டது. கொரோனா காலத்தில் 15 மாதம் அம்மாவின் அரசு வரியை உயர்த்தவில்லை. அந்த சமயத்தில் செலவு அதிகரித்தது. தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு இருந்தன. கொரோனா தொற்றை தடுக்க மருத்துவ செலவுகள் அதிகம் தேவைப்பட்டன. மக்களுக்கு ரூ.1000 பணம், மருத்துவ கருவிகள், மருத்துவ உபகரணங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலகட்டத்தை வைத்து எங்களை குறைகூறுவது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொரோனா 2 மாதத்தில் படிப்படியாக குறைந்துவிட்டன. முழு அளவில் கடைகள், தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருவாய் அதிகரித்தன. எங்களின் ஆட்சியில் எந்த வருவாயும் இல்லை. மக்களை ஏமாற்றும் அரசாக திமுக உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் இரத்து என கூறினார்கள். நீட் ரகசியம் 2 ஆண்டுகளுக்கு பின் சட்டப்போராட்டம் என்கிறார்கள். இதனை நாங்களும் செய்தோம். நீட் ரகசியத்தை இப்போது கூறிய உதயநிதி ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். கடந்த 3 ஆண்டுகளில் 2 இலட்சம் கோடி அரசு கடன் வாங்கியுள்ளது. ஆதி திராவிடர் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.750 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்றவை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. பள்ளியிலும், கல்லூரிகளிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி சீரழிந்து வருகிறார்கள். அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக ஒவ்வொரு குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1000 மாதம் வழங்கப்படும் என கூறினார்கள். இன்று 2 ஆண்டுகள் கழித்து தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 என கூறுகிறார்கள். எதன் அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்யப்படுகிறது. அதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கியுள்ளார்கள்.

ஒட்டுமொத்தமாக மக்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் இது. திமுக பட்ஜெட் கானல் நீர். இது மக்களின் தாகத்தை தீர்க்காது. கடந்த பட்ஜெட் தாக்கலின் போது அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது வாங்கப்பட்ட அரசு பேருந்துகள் இன்று வரை உபயோகம் செய்யப்படுகிறது. திமுக அரசு தற்போது வரை எந்த அரசு பேருந்தையும் புதியதாக வாங்கவில்லை. ஆனால், அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறார்கள். நன்றி, வணக்கம்" என கூறினார்.