நவம்பர் 01, ஈரோடு (Erode News): கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக கட்சியில் ஈரோடு மாவட்டத்தை கையில் வைத்துள்ள முக்கிய மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பிரிந்த அதிமுக நிர்வாகிகளை மீண்டும் அதிமுகவில் இணைத்து கட்சியை 2026 தேர்தலுக்கு எடப்பாடி பழனிச்சாமி வழியில் நடத்த முன் வர வேண்டும். இந்த விஷயத்தை பத்து நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். தமிழக அரசியலில் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. Breaking: அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையன் நீக்கம்.. அதிமுக தலைமை அதிரடி உத்தரவு.!
கே.ஏ. செங்கோட்டையன் கட்சி பதவியில் இருந்து நீக்கம்:
இதனால் கழக விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை கட்சி பதவியில் இருந்து நீக்கி இ.பி.எஸ் உதவிட்டார். பசும்பொன்னில் நேற்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி ஆகியோரை அவர் சந்தித்த நிலையில், அதிமுகவில் இருந்து கே.ஏ. செங்கோட்டையனை (KA Sengottaiyan) நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.ஏ. செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்தார். மேலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து செயல்பட்டதால் செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்கள் இனி அவருடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்தார்.
செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு:
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.ஏ.செங்கோட்டையன் தேவர் ஜெயந்திக்கு சென்றதால் கட்சியிலிருந்து தான் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, "புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து 53 ஆண்டுகளாக இயக்கத்திற்காக உழைத்துள்ளேன். என்னை கட்சியில் இருந்து நீக்கியது மன வேதனையை மட்டுமல்ல. கண்ணீர் சிந்த வைக்கிறது. நான் இரவில் இருந்து தூங்கவில்லை. 53 ஆண்டுகால எனது வாழ்க்கையை இயக்கத்திற்காக அர்ப்பணித்து இப்போது கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். என் அரசியல் பயணத்தில் சிறந்த முறையிலே தடம் புரளாமல் இயக்கத்திற்காக நான் பணியை ஆற்றி இருக்கிறேன் என்பதை புரட்சித்தலைவி அம்மா அவர்களே திருச்சியில் என்னுடைய திருமணத்தில் எடுத்துச் சொல்லி இருக்கிறார். இமயமே தன் தலையில் விழுகிறது என்றாலும் சறுக்காமலும், வழுக்காமலும் இந்த இயக்கத்திற்கு விஸ்வாசமுடன் தொண்டனாக இருந்த காரணத்தால் தான் இத்தனை பொறுப்புகளை நான் அவருக்கு வழங்கி இருக்கிறேன் என்று அம்மா குறிப்பிட்டதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.
2 வாய்ப்புகளை விட்டு கொடுத்ததாக பேச்சு:
புரட்சித் தலைவர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி இயக்கம் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக எல்லோருடன் சேர்ந்து என்னுடைய பணிகளை அயராது நான் ஆற்றி இருக்கிறேன். புரட்சித்தலைவி அம்மாவுடைய மறைவுக்குப் பிறகு இயக்கம் உடைந்து விடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இரண்டு முறை எனக்கு வாய்ப்புகள் கிடைத்த போது கூட அந்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்து இருக்கேன் என்பது நாடறியும். கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொறுப்பேற்றதற்கு பிறகு 2024 அவர் எடுத்த முடிவின் காரணமாக, பல்வேறு சோதனையின் காரணமாக கழகம் வெற்றி வாய்ப்பு இழந்த நிலையை நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். ஆனால் புரட்சித் தலைவருடைய வாழ்க்கை வரலாற்றை பார்க்கின்றபோது தோல்வி என்பதே அவர் வரலாற்றில் இல்லை என்ற வரலாற்றை படைத்தவர்.
கருத்துக்களை பரிமாறியதற்கான காரணம் என்ன?
புரட்சித்தலைவி அம்மா ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் மறுமுறை வெற்றி என்ற இலக்கை சரித்திரம் காணுகின்ற அளவிற்கு உருவாக்குவோம் என்ற நிலையில் வாழ்ந்தவர். 2024க்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து வெளியே சென்றவர்கள், மனவேதனையோடு தங்கள் பணிகளை ஆற்றாமல் துயரத்தோடு இருக்கின்ற அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த கருத்துக்களை நாங்கள் வெளிப்படுத்தினோம். 2026க்கு பிறகு நாம் ஏதாவது இயக்கத்திலே வெற்றி பெற இயலவில்லை என்றால் அதற்கு யார் காரணம் ஏன் நீங்கள் சொல்லவில்லை? என்று ஒரு கருத்து பரிமாறப்படும் என்ற நோக்கத்தோடு தான் வெற்றி என்ற இலக்கை எட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த கருத்துக்களை நாங்கள் அன்றைக்கு பரிமாறினோம்.
புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் கனவு:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிற தொண்டர்கள் உணர்வுகளை தெரிந்து கொண்டு இந்த பணிகளை நாங்கள் செய்தோம். 2024 என்பது நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஏறத்தாழ படு தோல்வி அடைந்தோம். புரட்சித்தலைவர் கண்ட கனவு, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நூறாண்டு காலம் இயக்கம் வலிமையோடு இருக்கும் என்று குறிப்பிட்து நிறைவேற எங்களால் இயன்றவற்றை செய்தோம். அம்மாவின் கருத்திற்கேற்ப என்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தின். அந்த கருத்தின் அடிப்படையில் அதற்குப் பிறகு அடுத்தடுத்த நாட்கள் அனைத்து பதவிபொறுப்புகளும் நீக்கப்பட்டு இருக்கிறது. உறுப்பினரைத் தவிர அனைத்து பொறுப்புகளும் நீக்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலின் நிலை என்ன? என்பதை உணர்ந்துதான் அந்த கருத்துக்களை எல்லாம் நான் வெளிப்படுத்தினேன் என்பதை நான் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவர் ஜெயந்திக்கு சென்றதால் கிடைத்த பரிசு:
நேற்று முன்தினம் தேவர் ஜெயந்திக்கு செல்கிற போது எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அனைவரிடமும் பேசினேன். இயக்கம் வலிமையாக இருப்பதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் அந்த நிகழ்ச்சியிலே தேவர் ஜெயந்தியில் கலந்து கொண்டு நான் அந்த பணிகளை ஆற்றினேன். தேவர் ஜெயந்தி சென்று தேவருக்கு மரியாதை செலுத்தி தேவத்திருநாளில் கலந்து கொண்டு அந்த பூஜையில் கலந்து கொண்டதற்கு எனக்கு கிடைத்த பரிசுதான் நான் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பதை நான் நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். தியாகம் செய்து தேசிய தலைவராக, எல்லோரும் போற்றுகிற, எல்லாராலும் நேசிக்கப்படுகிற ஒரு தலைவருடைய விழாவில் கலந்து கொண்டதற்காக நீக்கப்பட்டுள்ளேன். அங்கு சென்று நீங்களும் இந்த இயக்கத்திலே வலிமை சேர்ப்பதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அவர்கள் இடத்திலே நான் பேசி இருக்கிறேன். நான் அதை மறுக்கவில்லை.
கண்ணீர் சிந்தும் நிலை:
ஆனால் இன்றைய நிலையிலே அவர் சொல்வது திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நான் உறுதுணையாக இருப்பதாக கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார். என்னை கட்சியில் இருந்து நீக்கியது மன வேதனையை மட்டுமல்ல. கண்ணீர் சிந்த வைக்கிறது. நான் இரவில் இருந்து தூங்கவில்லை. 53 ஆண்டுகால எனது வாழ்க்கையை இயக்கத்திற்காக அர்ப்பணித்து இப்போது கண்ணீர் சிந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.