ஜூலை 21, சென்னை (Chennai News): அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் எம்பி, எம்எல்ஏ, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆகிய பொறுப்புகளில் இருந்த அன்வர் ராஜா இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இது தொடர்பான தகவலை அறிந்த அதிமுக தலைமை, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்பி அன்வர் ராஜாவை நீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திமுகவில் இணைய திட்டம்?
மேலும் திமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ள அன்வர் ராஜா திமுகவில் இணைய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவிலிருந்து அவரை கட்சியின் தலைமை நீக்கி உத்தரவிட்டுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களை நேரில் சந்தித்து தனது பிரச்சார வியூகத்தை செயல்படுத்தி இருக்கிறார். இதனிடையே அதிமுக முன்னாள் எம்பி ஒருவர் திமுக கட்சியை நோக்கி பயணித்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.