செப்டம்பர் 13, திருச்சி (Trichy News): 2026 சட்டப்பேரவை தேர்தலில் 'உங்க விஜய் உங்களுக்காக வர்றேன்' என்ற முழக்கத்துடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கிறார். விழுப்புரம், மதுரையில் முதல் 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்த விஜய், இன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சார பணிகளிலும் ஈடுபடுகிறார். பிற அரசியல் கட்சிகளைப்போல அல்லாமல், வாரத்துக்கு ஒருநாள் மட்டும் விஐய் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 26க்கும் மேற்பட்ட கட்டுப்பாடுகள் தவெக தொண்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. CP Radhakrishnan: துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன்..!
திருச்சியில் தவெக தலைவர் விஜய்:
திருச்சி மரக்கடை பகுதியில் காலை 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய், சாலை மார்க்கமாக இல்லாமல் தனி விமானத்தில் திருச்சி வந்தடைந்தார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட பகுதிகளில் 4 இடங்களில் அவர் உரையாற்றுகிறார். விஜயை வரவேற்கவும், அவருக்கு ஆதரவு அளிக்கவும் தவெக தொண்டர்கள் இன்று காலை முதலாகவே திருச்சி விமான நிலையத்திலும் குவிந்தனர். திருச்சி தமிழகத்தின் மத்திய மண்டலமாக கருதப்படுகிறது. இந்த மையத்தில் இருந்து விஜய் தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கி இருக்கிறார். இதற்காக தவெக பிரச்சார பேருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டது.

விஜய் பேச்சு:
இந்நிலையில், திருச்சியில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், " எல்லாருக்கும் வணக்கம். போருக்கு முன் குலதெய்வத்தை வணங்குவது போல அடுத்தாண்டு வரும் தேர்தலுக்கு முன் மக்களை பார்க்க வந்துள்ளேன். ஜனநாயகப் போருக்கு தயாராகும் முன் மக்களாகிய உங்கள் அனைவரும் பார்த்துவிட்டு செல்ல வந்திருக்கிறேன். நல்ல காரியத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறேன். திருச்சியில் இருந்து தொடங்கிய அனைத்தும் திருப்புமுனையாக அமையும் என்று சொல்வார்கள். அண்ணா முதலில் போட்டியிட நினைத்ததும், எம்ஜிஆர் முதலில் மாநாடு நடத்தியதும் திருச்சியில் தான். நம் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்த மண்ணும் இதுதான். மலைக்கோட்டை உள்ள மண்ணும் இதுதான். தொண்டர்களை பார்க்கும்போது உணர்ச்சிபூர்வமாகவும், பரவசமாகவும் உள்ளது. தமிழக முதல்வர் அவர்களே! திருச்சியில் உள்ள மக்களுடைய சத்தம் உங்களுக்கு கேட்கிறதா? டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு எனும் வாக்குறுதி என்ன ஆனது? மாணவர்களின் கல்வி கடன் ரத்து எனும் வாக்குறுதி என்ன ஆனது? திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசு வேலையில் பெண்களுக்கு 40 சதவீதம் இட ஒதுக்கீடு எனும் வாக்குறுதி என்ன ஆனது? அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அரசு பணியில் 2 லட்சம் காலிப்பணியிடங்கள் என்று சொன்னீர்களே! செய்தீர்களா? மின் கட்டண கணக்கீடு மாதம்தோறும் எடுப்பேன் என்று சொன்னீர்களே! செய்தீர்களா? 505 தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ள திமுக அதில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது? இப்படியே நாம் கேள்வி கேட்டு கொண்டு இருக்க வேண்டியது தான். திமுகவினிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரப்போவதில்லை. திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இரண்டு முக்கிய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அமைச்சர்கள் உள்ள சொந்த மண்ணிலேயே மணல் திருட்டு நடக்கிறது. பேருந்தில் பெண்களை இலவசமாக அனுமதித்து விட்டு ஓசி பயணம் என்கிறார்கள். பெண்களுக்கு ஆயிரம் கொடுத்து விட்டு சொல்லிக்காட்டி அசிங்கப்படுத்தலாமா? 2026 தேர்தலுக்கு முன் எங்களால் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமோ அவற்றை மதிப்பீடு செய்தே வாக்குறுதிகளை அளிப்போம். கல்வி, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளில் தவெக எந்தவித சமரசமும் இல்லாமல் வழங்கும். நன்றி வருக!" என தனது உரையை முடித்தார்.