TN Cabinet Change on 29 Sep 2024 | Udhayanidhi Stalin (Photo Credit @IshariKGanesh / @mkstalin X)

செப்டம்பர் 29, சென்னை (Chennai News): 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்னர், தமிழ்நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தமிழ்நாட்டின் அரசாட்சியை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் நடைபெற்று முடிந்து 3 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், துணை முதல்வர் பொறுப்பு திருவெல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், விளையாட்டு நலத்துறை அமைச்சரும், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது. நேற்று (செப் 29) கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாலை 03:30 மணிக்கு மேல் துணை முதல்வராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

துறைகள் ஒதுக்கீடு விபரம்:

அதேவேளையில், அமைச்சர் பொன்முடி (Ponmudi) வனத்துறைக்கும், மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேம்பாட்டு துறைக்கும், மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறைக்கும், ராஜ கண்ணப்பன் காதி மற்றும் பால்வளத்துறைக்கும், தங்கம் தென்னரசு நீதித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர். தமிழக அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான் (Gingee Mastan), கா. ராமச்சந்திரன் ஆகியோர் தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கா. ராமச்சந்திரன் தமிழக அரசின் தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வானிலை: காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; இன்று இங்கெல்லாம் கனமழை - வானிலை ஆய்வு மையம்.! 

துணை முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்பு:

துணை முதல்வர் பொறுப்பேற்ற உதயநிதி (Udhayanidhi Stalin) ஸ்டாலினுடன், புதிய அமைச்சர்களாக ஆர். ராஜேந்திரன், வி. செந்தில் பாலாஜி (V. Senthil Balaji), கோவி. செழியன் (Govi. Chezhian), சா.மு நாசர் (SM Nasar) ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். அமைச்சரவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி மற்றும் ஆவடி நாசர் மீண்டும் அமைச்சர் பொறுப்புகளை பெற்றுள்ளனர். இதில் கோவி. செழியன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் முதல் முறை அமைச்சர்களாக பொறுப்பேற்று இருக்கின்றனர். அதன்படி, ராஜேந்திரனுக்கு சுற்றுலாத்துறையும், செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்குத் துறையும், கோவி. செழியனுக்கு உயர் கல்வித் துறையும், நாசருக்கு சிறுபான்மை நலத் துறையிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவி செழியன் பற்றி சுருக்கமாக:

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம், திருவிடைமருதூர், ராஜாங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கோவி. செழியன் (வயது 57) திருவிடைமருதூர் தொகுதியில் கடந்த 2011, 2016, 2021 என மூன்று முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி அடைந்துள்ளார். தமிழக அரசின் தலைமை கொறடாவாகவும் பணியாற்றியவர், தற்போது அமைச்சராக இருக்கிறார். எம்ஏ, எம்.பில், பி.எல், பி.எச்டி பட்டங்கள் பெற்றவர், வழக்கறிஞராகவும் பணியாற்றி இருக்கிறார்.

ராஜேந்திரன் பற்றி சுருக்கமாக:

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த ராஜேந்திரன் கடந்த 2006 முதல் 2016 ஆம் ஆண்டு வரை பனமரத்துப்பட்டி தொகுதியிலும், 2016 ஆம் ஆண்டு முதல் சேலம் வடக்கு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆகவும் இருக்கிறார், தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். பிஏ, பிஎல் பட்டம் பெற்றவர் வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். அமைச்சரவை மாற்றத்தை பொறுத்தவரையில் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் தங்களின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.