ஜூன் 14, சென்னை (Tamilnadu Politics): தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் (DMK Minister Senthil Balaji) சகோதரர், உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது பலகோடி ரொக்க பணம் மற்றும் ஆவணங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இதன் எதிரொலியாக, நேற்று முன்தினம் முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையின் 18 மணிநேர சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையின் முடிவில், நேற்று நள்ளிரவு 01:30 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடுகள் செய்ததாக கைது செய்யப்பட்டார். அதிகாரிகள் அவரை கைது செய்யும் போது ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக அவர் மயங்கி விழுந்து கதறி அழுதுகொண்டு இருந்தார். இதனையடுத்து, அவர் உடனடியாக அங்கிருந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் தொண்டர்கள் மருத்துவமனையில் குவிய தொடங்கினர். திமுக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), சேகர் பாபு (Sekar Babu), சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி (Anbil Mahesh) உட்பட பலரும் மருத்துவமனைக்கு வர தொடங்கினர்.
மின்சாரத்துறை அமைச்சரை நேரில் கண்டு விசாரித்த அமைச்சர் சேகர் பாபு, "செந்தில் பாலாஜி சுயநினைவு இன்றி இருக்கிறார். அவரின் காதுகளில் காயம் இருக்கிறது. அவரை விசாரணை என்ற பெயரில் அதிகாரிகள் தாக்கி இருக்கின்றனர்" என்று பல அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து பேட்டி அளித்து இருந்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "மத்திய அரசின் இவ்வாறான செயல்பாடுகளுக்கு திமுக அஞ்சாது" என தெரிவித்தார்.
இன்று காலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் உடல்நலம் சீராக இருக்கும் நிலையில், அவருக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதனை செய்யவும் மருத்துவமனைக்கு விரைகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீதான நடவடிக்கைக்கு இந்திய அளவில் இடதுசாரி கட்சிகள் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் நாடகத்தனமானது என பாஜக மூத்த தலைவர் விமர்சித்து இருக்கிறார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நாராயண் திருப்பதி (Narayan Thirupathy) இதுகுறித்து பேட்டி அளிக்கையில், "திமுகவின் முழு நாடகம் இது. இதற்கான கதையாக்கம், இயக்கம் போன்றவற்றை திமுக செய்கிறது.
தமிழ்நாடு முதல்வராக இருக்கும் மு.க ஸ்டாலின் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை பறித்திட வேண்டும். அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியது கடமை ஆகும். சட்டத்தை அமைச்சர் கைகளில் எடுக்க இயலாது. அமைச்சரை அவர் பதவிநீக்கம் செய்யாத பட்சத்தில் அரசு கேலிக்கூத்தாகும். உரிய நீதி கிடைக்க மத்திய அமைப்புகள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார்.
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிட்ட செந்தில் பாலாஜி, நாம் (திமுக) வெற்றிபெற்று கோட்டையில் ஆட்சியை பிடித்தால், 10 மணிக்கு முதல்வர் (மு.க ஸ்டாலின்) பொறுப்பேற்றதும், 11 மணிக்கு நீங்கள் மாட்டு வண்டியில் மணல் அள்ளுவதற்கு புறப்பட்டு செல்லலாம். எவனும் (அரசு அதிகாரிகளை குறிப்பிடுகிறார்) வரமாட்டான், தடுக்கமாட்டான் என ஆற்றில் மணல் அள்ளுவதை வெளிப்படையாக ஆதரித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | It is a complete drama by DMK...ED called Senthil Balaji for interrogation, he is a minister, and it's his duty to cooperate with the investigation…I demand CM MK Stalin to dismiss Senthil Balaji from his ministry immediately and ask him to cooperate with the probe":… https://t.co/Oe4crk8Ota pic.twitter.com/06nDPjFhWF
— ANI (@ANI) June 14, 2023