PMK Ramadoss | DMK Minister SS Sivasankar (Photo Credit: @drramadoss / @sivasankar1ss X)

அக்டோபர் 30, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு, தீபாவளியை முன்னிட்டு 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். கடந்த அக். 10-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், படிப்படியாக அரசு ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ், தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இதுவரை ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார்.

மறுசீரமைப்பு செய்யப்படும் துறை:

இந்த விசயத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், கண்டன அறிக்கை ஒன்றை அரசின் சார்பில் வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்த அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில்‌ தமிழ்நாட்டில்‌ மிக சிறந்த நிர்வாகம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில்‌, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில்‌, இந்த அரசானது பொதுமக்களின்‌ போக்குவரத்துத்‌ தேவை மற்றும்‌ சேவையைக்‌ கருத்தில்‌ கொண்டு, போக்குவரத்துக்‌ கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல்‌ செய்து சிறந்த முறையில்‌ செயல்பட்டு வருகிறது. Salem Shocker: பணிப்பெண்ணை கொலை செய்து உடல் வீச்சு; சேலத்தை அதிரவைத்த சம்பவத்தில் கணவன் - மனைவி கைது.! 

போனஸ் வழங்கப்பட்டுவிட்டது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்‌ கழகங்கள்‌ மிகுந்த நிதி நெருக்கடியில்‌ இருகின்ற நிலையிலும்‌, தமிழ்நாடு முதலமைச்சர்‌, தமிழ்நாடு அரசின்‌ போக்குவரத்துக்‌ கழகங்களில்‌ பணிபுரியும்‌ ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 741, சி மற்றும்‌ டி பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ்‌ மற்றும்‌ 11.67% கருணைத்‌ தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு. அரசு ஆணை எண்‌: 310, நிதித்‌ துறை நாள்‌: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல்‌ வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்‌: 124, போக்குவரத்துத்‌ துறை நாள்‌: 25/10/2024 ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக்‌ கழக தொழிலாளர்களின்‌ வங்கி கணக்கில்‌ வரவு வைக்கப்பட்டுள்ளது.

ராமதாஸின் அறிக்கைக்கு கண்டனம்:

இதனை அறிந்தும்‌, அறியாததுபோல மருத்துவர்‌ ச.ராமதாஸ்‌ எக்ஸ் தளத்தில்‌ குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும்‌, பிற மாநிலத்தை சார்ந்தவர்களும்‌, வெளிநாட்டவர்களும்‌ போக்குவரத்துத்‌ துறையின்‌ செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்‌. அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும்‌, வேறு அரசியல்‌ செய்ய வழி இல்லாமலும்‌ உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும்‌" என தெரிவித்துள்ளார்.