செப்டம்பர் 29, கரூர் (Karur News): கரூர் மாநகரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரண சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமின்றி நாடு முழுவதையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உட்பட தேசிய முதல் மாநில அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றிய நேரத்தில் ஏற்பட்ட மின்சார துண்டிப்பும் கூட்ட நெரிசலுக்கு காரணமாக இருந்ததாக நேரில் இருந்தவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
கரூர் சம்பவம் - தவெக தலைவர் விஜய் அறிக்கை:
இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் திருச்சி விமான நிலையம் மற்றும் சென்னையில் அவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தபோது அவர் பதிலளிக்காமல் சென்றார். இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் பின் சென்னை வீட்டிற்கு சென்ற தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் இதயம் நொறுங்கி இருப்பதாக இரங்கல் தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு பின் அவரது வாசல் பூட்டிய நிலையில் வீட்டினுள் இருந்தவர் இன்று அவசர அவசரமாக பாதுகாப்பு படையினர் சூழ வெளியே சென்றார். ஆனால் அவர் எங்கு சென்றார் என்பது தொடர்பான தகவல் கிடைக்கப்பெறவில்லை. Trending Video: விஜயின் பிரச்சார பேருந்து மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து.. பதறவைக்கும் வீடியோ.!
புஸ்ஸி ஆனந்தை தேடும் போலீசார் :
இதனிடையே கூட்டம் அதிகமாக இருப்பதால் அசம்பாவிதம் நேர வாய்ப்புள்ளது என முன்னதாகவே நாமக்கல் காவல்துறையினர் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்ததாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து ரோட் ஷோ எதுவும் நடத்தக்கூடாது என கூறிய நிலையில், தவெகவினர் விஜய் வரும் வழியில் 4 மணிநேரம் வேண்டுமென்றே தாமதம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார், மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர். ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது.
இரவுக்குள் கைது செய்ய திட்டம் :
கரூர் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையிலான 5 தனிப்படை காவல்துறையினர் புஸ்ஸி ஆனந்த், தவெக இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து இன்று இரவுக்குள் கைது செய்ய தீவிரம் காட்டியுள்ளனர்.