Chennai Sanitary Worker Varalatsumi Death DMK Minister Ma. Subramanian Pressmeet (Photo Credit: @VijayPradeep X / YouTube)

ஆகஸ்ட் 23, அமைந்தகரை (Chennai News): சென்னையில் உள்ள கண்ணகி நகர், பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவரின் மனைவி வரலட்சுமி (வயது 30). தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, இருவருக்கும் தற்போது 7ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தையும், 4ம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தையும் என 2 பிள்ளைகள் இருக்கின்றனர். ரவியின் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் பணிக்கு செல்ல முடியாது என கூறப்படுகிறது. இதனால் சிறிய அளவிலான வேலைகளை மட்டுமே செய்து வருகிறார். குடும்பத்தின் நிதித்தேவை மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வரலட்சுமி துப்புரவு பணியாளராக சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வேலை பார்த்து வருகிறார். Viral Video: வெறும் கையால் பாம்பை பிடித்த சிறுவன்.. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்..! 

தூய்மை பணியாளர் மரணம் (Sanitary Worker Dies by an Electrocution in Chennai):

இதனிடையே, சென்னையில் மிதமான மழை தொடர்ந்து வந்தது. தாழ்வான இடங்கள், கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில் லேசாக நீர் தேங்கி இருந்தது. வரலட்சுமி இன்று காலை வழக்கம்போல பணிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, எண்ணூர் 13வது மண்டலம் பகுதியில், பாதாள சாக்கடையாக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறிதளவு நீர் தேங்கி இருந்தது. அதனை கடந்து வரலட்சுமி சென்ற சமயத்தில், மின்கசிவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுதெரியாமல் அவர் நீரில் கால் வைத்ததால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர், மின்வாரிய அதிகாரிகள் உதவியுடன் மின்னிணைப்பை துண்டித்துவிட்டு வரலட்சுமியின் உடலை மீட்டனர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அமைச்சர் உறுதி:

கடந்த சில நாட்களாக சென்னையில் தூய்மை பணியாளர்கள் முன்னெடுத்த போராட்டம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் வரலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதல்வரின் சார்பில் ஆறுதல் கூறினார். மேலும், வரலட்சுமியின் குழந்தைகளுக்கான கல்வி செலவை திமுக ஏற்றுக்கொள்கிறது எனவும், மின்வாரியம் சார்பில் ரூ.10 லட்சமும், ஒப்பந்த நிறுவனம் சார்பில் ரூ.10 லட்சமும் என ரூ.20 லட்சமாக உடனடி நிவாரண நிதியையும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். ரவிக்கு கடினமான பணிகள் செய்ய இயலாது என்பதால், அவரின் மனைவி பணியாற்றி வந்த ஒப்பந்த நிறுவனத்திலேயே பணி பெற்றுத்தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.