KA Sengottaiyan (Photo Credit: @TwitzKarthi X)

செப்டம்பர் 08, கோயம்புத்தூர் விமான நிலையம் (Coimbatore News): ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செப்டம்பர் ஐந்தாம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "கட்சியிலிருந்து விலகிய மூத்த நிர்வாகிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும்., 2026 சட்டப்பேரவை தேர்தலில் பிளவுபட்ட அதிமுக ஒன்று சேர்ந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். எடப்பாடி பழனிச்சாமிடம் இது குறித்து ஆறு முன்னாள் அமைச்சர்கள் சந்தித்து வலியுறுத்தவும் செய்திருந்தோம். அவர் 10 நாட்களுக்குள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்து இருந்தார். அக்கட்சியின் விதியை மீறி பொதுவெளியில் செய்தியாளர்களை சந்தித்து கட்சி விஷயம் குறித்து கூறியதால், செங்கோட்டையனின் கட்சிப்பதவி பறிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இதனால் அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், செங்கோட்டையன் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. செங்கோட்டையனின் கருத்துக்கு ஆதரவாக டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் குரல் கொடுத்துள்ளதால், மீண்டும் அதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது. இது 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வியூகத்தை மீண்டும் மடைமாற்றிவிடுமோ என்ற அச்சம் அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது. Airport Moorthy Arrested: விசிக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய ஏர்போர்ட் மூர்த்தி இரவோடு-இரவாக கைது.! 

கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு (KA Sengottaiyan Latest Speech):

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "மனநிம்மதிக்காக நான் ஹரித்வார் செல்கிறேன். பாஜக தலைவர்களை சந்திக்க டெல்லி செல்லவில்லை. நான் கோவிலுக்குத்தான் செல்கிறேன். எனக்கு நிம்மதி வேண்டும். கட்சியின் நலனுக்காக நான் சொன்னேன். பொதுச்செயலாளர் எடுத்த முடிவு குறித்து கருத்துக்கள் சொல்ல முடியாது. அவர் உயர்மட்ட ஆலோசனை நடத்தி அறிவித்து இருக்கிறார். எனது கருத்துக்கு எதிராக அவர்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம். பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி எடுத்த முடிவுக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. கட்சி வளர வேண்டும் என்பதே எனது எண்ணம். தொண்டர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும். இதுவரை 10 ஆயிரம் பேர் என்னை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் தொண்டர்கள்" என தெரிவித்தார்.