நவம்பர் 05, தலைமை செயலகம் (Chennai News): சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும், சமூக நல ஆணையரகம் மூலம், பாதிப்புக்கு உள்ளாகும் மகளிருக்கு உதவிட பெண்களுக்கான கட்டுப்பாட்டு மையம், "மகளிர் உதவி எண் 181 சென்னையில் செயல்பட்டு வருகிறது. மகளிர் உதவி பணியிடத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிடும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெற்றிட இணையதளத்தில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு சமூக நல ஆணையரக இணை இயக்குநரால் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஹிந்தி மொழி சர்ச்சை:
அந்த விண்ணப்ப அறிவிப்பில் "அழைப்பு ஏற்பாளர்" என்று குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு தேவையான தகுதிகள் என தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி எனபதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த தகவல் தமிழ்நாடு அரசின் கவனத்திற்குச் சென்ற நிலையில், விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருத்தப்பட்டது. மேலும், தவறுதலாக இணையத்தில் பதிவேற்றம் செய்த இணை இயக்குநர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Grand Masters Chess Championship 2024: இன்று முதல் தொடங்குகிறது சென்னை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்; நேரில் சென்று பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
அரசியல் செய்வது பரிதாபமாக உள்ளது:
இந்த விஷயம் குறித்து அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் மொழியினை உயிருக்கும் மேலாய் மதிக்கும் முதலமைச்சர் தலைமையில், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் மட்டுமே முக்கிய மொழியாக உள்ளது. நீதிமன்றம், மத்திய அரசுடனான கடிதப் போக்குவரத்து போன்றவற்றிற்கு மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்தப்படுகிறது. எண்ணிலடங்கா பெருமைகள் கொண்ட திராவிட அரசை, ஒரு அரசு அலுவலர் செய்த தவறை வைத்துக் கொண்டு அரசியல் செய்யும் நிலையில் சிலர் உள்ளதைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
வளர்ச்சியால் கூக்குரல் இடுகிறார்கள்:
தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுத்து கூச்சல் போட வேண்டியதில்லை. இதனால் மக்கள் ஏமாறப் போவதில்லை. முதலமைச்சர் ஆட்சியில், தமிழ் மொழி மென்மேலும் சிறப்புகள் பெற்று வளர்ந்து வருகிறது. இதனைக் காண சகிக்காதவர்கள் தான் இப்போது கூக்குரல் இடுகிறார்கள். அதனை புறம் தள்ளி, எங்கள் தாய்மொழியாம் தமிழ் வழி பயணத்தை சிறப்புற தொடர்வோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.