அக்டோபர் 07, அவிநாசி (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சாலையில், ஸ்டேன்ஸ் பள்ளி (Stanes Anglo Indian School) செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை முடிந்து, இன்று காலை மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் வந்திருந்தனர். வழக்கம்போல அவரவர் தங்களின் பணிகளை மேற்கொண்டு இருந்தனர். இதனிடையே, பள்ளியின் மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன நிர்வாகிகள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். PM Modi met with Maldives President: இந்திய பிரதமர் நரேந்திர மோடி - மாலத்தீவு அதிபர் முய்சு நேரில் சந்திப்பு.. உயர்மட்ட ஆலோசனை.!
காவல்துறையினர் விசாரணை:
மாணவ-மாணவியரும் கட்டிடத்தில் இருந்து மைதானப்பகுதிக்கு உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையின் முடிவில், போலியான வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மின்னஞ்சல் அனுப்பிய நபர் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கையா நாயுடு தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த நிலையில், அந்த விடுதிக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கு விடுமுறை:
பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், பள்ளிக்கு விடுமுறை விடுக்கப்படுவதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் பதறியபடி விரைந்து தங்களின் குழந்தைகளை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து சென்றனர். இன்று ஒருநாள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.