MK Stalin Tribute to La Ganesan (Photo Credit: @MKStalin X / @UdhayStalin X)

ஆகஸ்ட் 16, சென்னை (Chennai News): தமிழக அரசியலில் மூத்த பாஜக தலைவரும், நாகலாந்து மாநிலத்தின் ஆளுநருமானவர் இல. கணேசன் (வயது 82). கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வீட்டில் இருந்த கணேசன் மயங்கி விழுந்தார். இதனால் தலையில் காயம் ஏற்பட்டு, உடனடியாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 15) இரவு அவரின் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக பாஜக வட்டாரங்கள் சோகத்தில் ஆழ்ந்தன. தமிழக பாஜக தலைவர்கள் பலரும் நேரில் வந்து தங்களின் அஞ்சலியை பதிவு செய்தனர்.

மலர்வளையம் வைத்து அஞ்சலி:

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சென்னை தி. நகரில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் இல. கணேசனின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி அலுவலக பணிகள் காரணமாக நேரில் வர இயலவில்லை. ஆதலால், தமிழ்நாடு முதல்வரிடம் தனது சார்பில் மலர் வளையம் வைக்க பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்து இருந்தது. இதனையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமரின் சார்பில் மலர் வளையம் வைத்தார். மத்திய அமைச்சர் இறுதி சடங்கு பணிகளில் கலந்துகொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Dindigul News: 40+ பெண்கள் டார்கெட்.. தேடித்தேடி சீரழித்த கயவன்.. வேலைக்கு செல்லும் பெண்களே உஷார்.! 

முதல்வர் இரங்கல்:

இல. கணேசனின் மறைவு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "மூத்த அரசியல் தலைவரும் நாகாலாந்து மாநில ஆளுநருமான திரு. இல. கணேசன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். திரு. இல. கணேசன் அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவர், பா.ஜ.க. தேசிய துணைத்தலைவர், மாநிலங்களவை உறுப்பினர், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஆளுநர் எனப் பல்வேறு பொறுப்புகளைத் திறம்பட வகித்த, நீண்ட பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர். அரசியல் வாழ்க்கைக்காகத் திருமணம் கூட செய்துகொள்ளாமல் பொதுவாழ்வுக்குத் தம்மை அர்ப்பணித்தவர். நெருக்கடி நிலைப் பிரகடனத்தை கண்டித்துப் போராட்டம் நடத்தி, பாடல்கள் எழுதியவர். மாற்றுக் கொள்கைகள் கொண்ட இயக்கங்களில் உள்ள தலைவர்களிடத்திலும் மரியாதை பாராட்டி, மாண்புடன் நடந்துகொண்டு, அரசியல் நாகரிகத்தைப் பேணிக்காத்த அரிய தலைவர்களில் ஒருவர். திரு. இல. கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களும் முதலமைச்சராக இருந்தபோது, திரு. கணேசன் அவர்களின் பிறந்தநாளில் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தமது அன்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எளிமை, அதிர்ந்து பேசாத பண்பு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை ஆகியவற்றால் அனைத்துத் தரப்பிலும் நண்பர்களைக் கொண்டவராகத் திரு. இல. கணேசன் அவர்கள் விளங்கினார். என் மீதும் தனிப்பட்ட முறையிலும் அன்பு காட்டி வந்தார். அவரது இல்லத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் என்னை நேரில் வந்து அழைக்கும் அளவுக்கு நல்ல நட்பினை நாங்கள் இருவரும் பேணி வந்தோம். உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் முழு உடல்நலம் பெற்று, மீண்டு வருவார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி வேதனையளிக்கிறது. அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.