Tamilnadu State New Education Policy (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 08, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாட்டுக்கான மாநில கல்விக் கொள்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மடிக்கணினி வழங்குதல் ஆகிய திட்டங்களையும் இன்று தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைத்தார். மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையை உள்ளடக்கிய புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய மாநில கல்விக் கொள்கை உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கை (National Education Policy):

மத்திய அரசு மும்மொழிக்கொள்கையுடன் புதிய தேசிய கல்விக்கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த புதிய விதிகள் தமிழகத்தை அதிகம் பாதிக்கும் என எதிரிப்பு தெரிவித்த திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, கடந்த 2022 ஆம் ஆண்டு மாநில கல்விக்கொள்கையை உருவாக்க ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்பு குழு அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் தொடர் ஆய்வு செய்து, 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்தது. இந்த அறிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சமர்ப்பித்து இருந்தது. இந்த அறிக்கையை அரசு அமல்படுத்துவது தொடர்பாக பரிசீலனை செய்து சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வந்தது. La Ganesan Hospitalised: : அச்சச்சோ என்னாச்சு? பாஜக மூத்த தலைவர், ஆளுநர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி.! 

மாநில கல்விக் கொள்கை (State Education Policy):

இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய மாநில கல்விக்கொள்கையை அறிமுகம் செய்துள்ளார். அதன்படி, தமிழ், ஆங்கிலம் இரு மொழிக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது இருக்கக்கூடாது. நீட் உள்ளிட்ட தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் ஏற்படுத்த வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். கல்லூரி சேர்க்கையின் போது 12ஆம் வகுப்பு மதிப்பெண், பதினோராம் வகுப்பு மதிப்பெண் இடம் பெற வேண்டும். சிபிஎஸ்சி, டிமேட் பல்கலைக்கழகங்கள் கட்டணங்களை சீரமைக்க குழு அமைக்க வேண்டும் என பரிந்துரை கொடுக்கப்பட்டது. அதில் தமிழக அரசு கீழ்காணும் விஷயங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. அரசு ஏற்றுக்கொண்டதில் முக்கியமான தகவல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாநில கல்விக்கொள்கை அறிவிப்பு:

சென்னையில் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு உட்பட பலர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான் என உறுதிபட தெரிவித்தார். மும்மொழிக்கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குலக்கல்வியை கொண்டு வரும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றி இருந்தனர்.

புதிய கல்விக்கொள்கை குறித்து சுருக்கமாக:

* சிந்தித்து கேள்வி கேட்கும் மாணவர்களை உருவாக்கும்

* எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றல் / உத்வேகத்தை வழங்கும்

* தொழில்நுட்ப படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்

* படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்கும்

* கல்வியுடன் உடற்பயிற்சியும் வழங்கப்படும்

* தமிழ்மொழி தமிழ் எனது அடையாளம்

* தமிழும்-ஆங்கிலமும் என்ற இருமொழிக்கொள்கை

* புதிய மாதிரி பள்ளி, உண்டு-உறைவிட பள்ளி அமைக்கப்படும்

* கல்வி தொலைகாட்சி ஒவ்வொரு வீட்டையும் வகுப்பறையாக்கும்

* மதிப்பெண்ணை நோக்கிய காலங்கள் மாறி மதிப்பீடுகள் நோக்கி பயணம் இருக்கும்

* பசுமைப்பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்படும்

* நான் முதல்வன் வாழ்க்கைக்கு வழிகாட்டும்

* அனைவருக்கும் கல்வி, அனைவருக்குமான கல்வி வழங்கப்படும்

* கல்வி பாகுபாட்டை நீக்கி உங்களுக்கான கல்வி கொடுக்கப்படும்

* சமத்துவ கல்வி, அறிவியல் கல்வி அறிமுகம் செய்யப்படும்

* பகுத்தறிவு கல்வி மட்டுமே பயிற்றுவிக்கப்படும்

* அறிவியலுக்கு புறம்பான பிற்போக்கு சிந்தனை பள்ளிகளில் நுழைய அனுமதி கிடையாது

* உலகளவில் போட்டிபோட அரசு உறுதுணையாக இருக்கும்