நவம்பர் 13, தலைமை செயலகம் (Chennai News): பள்ளி மாணவிகளுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திட, பள்ளிகளிலும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு ஏற்படுத்த, மாணவ, மாணவியர் புகார் தெரிவிக்க பாடநூல்களின் பின்புற அட்டைகளில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அச்சடிக்க, பள்ளிகளில் மாணவர் மனசு புகார் பெட்டி ஏற்படுத்த, மாணவ மாணவிகளை வெளியில் அழைத்துச் செல்ல பெற்றோர் மற்றும் உயர் அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும், மாணவ மாணவியர்களிடம் ஒழுங்கீனமாக நடப்பவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன.
பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் என்சிசி வகுப்புகள் பெயரில், மாணவிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகி மற்றும் பள்ளி முதல்வர் மீது காவல் துறையினர் சார்பில் நடவடிக்கை எடுப்பட்டது. குற்றவாளியும் கைது செய்யப்பட்டார். தற்போது அந்த பள்ளிகள் அரசால் நியமனம் செய்யப்பட்ட சிறப்பு அதிகாரி கட்டுப்பாட்டில், அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
போக்ஸோ வழக்கு:
அதனைத்தொடர்ந்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவிகளை மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு மதுவை குளிர்பானத்தில் ஊற்றிக்கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை மறைக்க முயன்ற பள்ளியின் முதல்வர், செயலர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Kodaikanal: கொடைக்கானல் செல்ல திட்டமா? மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை.. காரணம் என்ன? விபரம் உள்ளே.!
விழிப்புணர்வு நடவடிக்கை:
பள்ளி மாணவ/மாணவிகளுக்கு எதிரான செயல்பாடுகளை தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையில் 1098 போன்ற கட்டணயில்லா தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விவரங்களை புகார் அளிக்க மாணவ/மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ/ மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை இக்குழு கூடி மாணவிகளுக்கெதிரான புகார் ஏதும் பெறப்படின் அதுசார்ந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. "மாணவர் மனசு" என்ற புகார்ப் பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழு உறுப்பினர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வாயிலாக பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாணவ-,மாணவிகளை வெளியே அழைத்துச் செல்ல கட்டுப்பாடு:
மேலும், பள்ளிகளிலிருந்து மாணவ/மாணவியர்களை விளையாட்டு உட்பட பிற விஷயங்களுக்காக வெளியே மாவட்ட அளவிலோ அல்லது மாநில அளவிலோ அழைத்துச் செல்ல நேரிடும்பொழுது, ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பெற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று அதன் பிறகு மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாவட்டக் கல்வி அலுவலரின் முன் அனுமதியின்றி மாணவ, மாணவியரை பள்ளியைவிட்டு வெளியே அழைத்துச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆய்வின்போது கவனிக்க உத்தரவு:
மேலும், மாணவ/மாணவியரை வெளியே அழைத்துச் செல்லும் பொழுது 10 மாணவர்களுக்கு ஒரு ஆண் ஆசிரியர் எனவும் 10 மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை எனவும் உடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்/ மாணவியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள்/ இணை இயக்குநர்கள் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்லும் பொழுது மேற்கண்ட பணிகளை கண்காணித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்க அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்பவர்கள் மீது காவல் துறை வாயிலாக குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் துறைரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.