AIADMK, AMMK, PMK & BJP Question CM Stalin’s Leadership (Photo Credit : Youtube)

ஆகஸ்ட் 06, திருப்பூர் (Tiruppur News): திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, குடிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிமுக எம்.எல்.ஏ மகேந்திரனுக்கு சொந்தமான 40 ஏக்கர் அளவிலான தென்னந்தோப்பு உள்ளது. இந்த தென்னந்தோப்பில் கடந்த இரண்டு மாதமாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த தந்தை, மகன்கள் குடும்பமாக தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இதனிடையே தந்தை, மகன்கள் இடையே நடந்த குடும்பத் தகராறு காரணமாக நேற்று இரவு சுமார் 10 மணிக்கு மேல் மகன்கள் இருவரும் தந்தையை வெட்டி இருக்கின்றனர்.

காவல் உதவி ஆய்வாளரை கொலை செய்து தப்பியோடிய குற்றவாளிகள் :

இது தொடர்பாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் குடிமங்கலம் காவல்நிலைய சார்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (வயது 57) நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது மூர்த்தி என்பவரின் மகன்களான மணிகண்டன், தங்கப்பாண்டி சேர்ந்து காவல் ஆய்வாளரை தலை துண்டித்து படுகொலை செய்தனர். கொலை சம்பவத்திற்கு பின் இருவரும் தப்பிச்சென்ற நிலையில், கொலை குறித்த தகவலறிந்த போலீசார் நேரில் வந்து காவல் ஆய்வாளரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் தலை துண்டித்து படுகொலை.. தமிழகமே அதிர்ச்சி.!

சட்டம் ஒழுங்கு எங்கே? - கேள்வி எழுப்பிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி :

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனிடையே தமிழ்நாடு கொலைகள் நகரமாக மாறி வருவதாகவும், தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என்ற கேள்வியையும் தமிழக எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன பதிவில், "எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?' காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்? விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?" என தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் காட்டம் :

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது வலைப்பதிவில், "திருப்பூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தன் துறையைச் சார்ந்த காவல் உதவி ஆய்வாளரைப் பாதுகாக்க முடியாத முதலமைச்சரால் பொதுமக்களை எப்படி பாதுகாக்க முடியும்? சாமானிய மக்கள் தொடங்கி அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், அரசியல் கட்சித்தலைவர்கள் வரை யாருக்குமே பாதுகாப்பற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தை யாருக்காக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது" என தெரிவித்துள்ளார். Breaking: காவல் உதவி ஆய்வாளர் படுகொலை.. ரூ.1 கோடி நிதியுதவி வழங்க உத்தரவிட்ட முதல்வர்.! 

பாமக தலைவர் அன்புமணி கண்டனம் :

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், "திமுக ஆட்சியில் யாரும் வாழவே முடியாதா? பணியில் இருக்கும் காவல் அதிகாரி ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்யும் அளவுக்கு குற்றவாளிகளுக்கு துணிச்சல் ஏற்படுகிறது என்றால், அந்த மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு என்பது பெயரளவுக்குக் கூட இல்லை என்று தானே பொருள். தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்கிறார்கள்; தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடுவதாக கூறி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்? தமிழகத்தில் யாருமே அச்சமின்றி வாழ முடியாது என்ற நிலை நிலவுவதையே இந்தக் கொலை காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு :

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை! திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காமல் பெருகிவரும் குடிப்பழக்கத்தாலும் போதைப்பொருள் புழக்கத்தாலும் பொது மக்களுக்கு தான் பாதுகாப்பில்லை என்று பார்த்தால், மக்களைக் காக்கும் காவல்துறையினரின் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பொதுவெளியில் மது அருந்துவதும், மதுபோதையில் மற்றவர்களைத் தொந்தரவு செய்வதும், அதைத் தட்டிக்கேட்பவர்களைக் கொலை செய்வதும் தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது" என தெரிவித்துள்ளனர்|