ஜனவரி 25, சென்னை (Chennai News): புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் (Vengaivayal) கிராமத்தில், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில், மனித மலம் கலக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்து, 700 நாட்களை கடந்து விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி விசாரணை நடந்து வந்தாலும், வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என மிகப்பெரிய அளவில் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. சாதிய தீண்டாமையின் உச்சம் என தாழ்த்தப்பட்ட அமைப்புகளின் குரலாக இருக்கும் பல இயக்கங்கள் தொடர் போராட்டங்கள் முன்னெடுத்தன. இதனிடையே, வழக்கு விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதைத்தொடர்ந்து, அதே பகுதியை சேர்ந்த பட்டியலின இளைஞர்கள் முரளிராஜா உட்பட 3 பேர் குற்றவாளிகள் என கூறப்பட்டனர். மேலும், இவர்கள் மூவரும் கவுன்சிலரின் கணவரை பழிவாங்கும் பொருட்டு, சாதிய பிரச்சனையை வேண்டும் என்றே தூண்டிவிட்டு இவ்வாறான அதிர்ச்சி செயலில் ஈடுபட்டது அம்பலமானது. இந்த விசாரணை அறிக்கையில் இருக்கும் தகவல் உண்மை இல்லை என அண்ணாமலை குற்றச்சாட்டு முன்வைத்து இருக்கிறார்.
வேங்கைவயல் சம்பவம் (Vengaivayal News):
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில், பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை நீர்த்தொட்டியில் சமூக விரோதிகள் மனித மலம் கலந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை அடுத்துத் தொடர்ந்த வழக்கு, எந்த முன்னேற்றமும் இன்றி, இரண்டு ஆண்டுகளைக் கடந்துவிட்டது. தற்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேரையே குற்றவாளிகள் என்று திமுக அரசு கூறியிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கடந்த டிசம்பர் 24, 2022 அன்று, மேல்நிலை நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீரைப் பயன்படுத்திய பட்டியல் சமூக மக்களுக்கு, உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவப் பரிசோதனையில், மக்கள் பயன்படுத்திய குடிநீர் காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதனை அடுத்து, வேங்கைவயல் கிராமத்து இளைஞர்கள் சிலர், மேல்நிலை நீர்த்தொட்டியில் ஏறிப் பார்த்தபோது, தண்ணீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டறிந்தனர், Yoshitha Rajapaksa: சொத்துகுவிப்பு வழக்கில் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது.. இலங்கை அரசியலில் அதிரடி.!
வழக்கில் முன்னேற்றம் இல்லை:
மேலும், மேல்நிலை நீர்த்தொட்டியின் உள்ளே கழிவுகள் மிதப்பதையும் கண்டறிந்தனர். உடனடியாக, வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், 26.12.2022 அன்று காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில், பட்டியல் சமூக இளைஞர்களையே தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பட்டியல் சமூக மக்கள், உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிவதில் தொய்வு காட்டிய காவல்துறைக்கும், திமுக அரசுக்கும் எதிராகப் போராட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கை, சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றியது திமுக அரசு. ஆனாலும், விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே, திரு. மார்க்ஸ் ரவிந்திரன் அவர்கள், பாஜகவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு. ஜி.எஸ். மணி அவர்கள் மூலம், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்றத்தின் தலைமையில் சிபிஐ விசாரணை அல்லது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி 24.02.2023 அன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். மாண்புமிகு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியதை அடுத்து, உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 29.03.2023 அன்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு எஸ். சத்தியநாராயணா தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இந்த ஒரு நபர் ஆணையம், கடந்த 14.09.2023 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால் விசாரணையை முழுமையாக முடித்து, இறுதி அறிக்கையை இன்று வரை தாக்கல் செய்யவில்லை. IND Vs ENG 2nd T20i: சேப்பாக்கத்தில் இன்று இந்தியா Vs இங்கிலாந்து டி20 போட்டி.. நேரலையை பார்ப்பது எப்படி? சேப்பாக்கம் செல்வோருக்கு டிப்ஸ்.!
குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை:
கடந்த 16.04.2024 அன்று, இந்த வழக்கு தொடர்பான பொதுநல மனுக்கள், அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கில் இன்றுவரை குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என்றும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும், வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும், வழக்கை நடத்துவதில் தமிழகக் காவல்துறை பொறுப்பின்றிச் செயல்படுகிறது என்றும் எடுத்துக் கூறப்பட்டதை அடுத்து, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு எஸ்.வி. கங்காபூர்வாலா அவர்கள் அமர்வு, அடுத்த மூன்று மாதங்களுக்குள், அதாவது 03.07.2024 அன்று அல்லது அதற்கு முன்னர், விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. ஆனால், அதற்குப் பின்னரும், ஒரு நபர் ஆணையமோ, சிபிசிஜடியோ விசாரணையை முடித்து இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை. யார் மீதும் வழக்குப்பதிவோ, குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை என்ற நிலையில், கடந்த 23.01.2025 அன்று, குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்ய இன்னும் கால அவகாசம் வேண்டும் என்று, சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனிடையே, 23.01.2025 அன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன் இந்தப் பொதுநல வழக்கு, விசாரணைக்கு வந்தபோது, கடந்த 20.01.2025 அன்றே, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மூவர் மீது 20.01.2025 அன்றே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்றால், 23.01.2025 அன்று, புதுக்கோட்டைச் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி அவகாசம் ஏன்?
சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரை:
குற்றம் நடைபெற்று சுமார் 750 நாட்கள் ஆகின்றன. இத்தனை நாட்களும் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் வழக்கு விசாரணையில் இல்லை. தொடக்கம் முதலே, வழக்கு விசாரணையின் போக்கு முறையானதாக இல்லை. முன்னுக்குப்பின் முரணாக தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் வழக்கு விசாரணை முடிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பாக, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கால அவகாசம் வேண்டும் என்று காவல்துறை மனுத்தாக்கல் செய்த நிலையில், அவசர அவசரமாக, பட்டியல் சமூக இளைஞர்கள் மூன்று பேர் மீதே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பதாகக் கூறுவது, பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக அரசின் கீழ் நடக்கும் இந்த விசாரணையின் மீது, பொதுமக்களுக்கு துளியளவு நம்பிக்கையும் இல்லை. இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகு, வழக்கை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் திமுக அரசின் நோக்கமாகத் தெரிகிறது. எனவே, இந்த வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்ற நோக்கில், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் நிலைப்பாடு" என தெரிவித்துளார்.
பாஜக அண்ணாமலையின் வேங்கைவயல் விவகாரத்தில் வலைப்பதிவு:
வேங்கைவயல் மக்களுக்காக தமிழக பாஜக நடத்தும் சட்டப் போராட்டம்.
வேங்கைவயல் வழக்கை, சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைக்க வேண்டும். pic.twitter.com/o04j8N7ZaF
— K.Annamalai (@annamalai_k) January 25, 2025